இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுக - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கை பக்கம் 83ல் ரூ.8 ஆயிரம் அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அதிமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு முன்வராத நிலையில், அதனை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், ஓர் அறிக்்கயாவது வெளியிட வேண்டும் என்பதே இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. இதற்கு கூட செவிமடுக்க திமுக அரசு தயாராக இல்லை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாடு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் 2009ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட போது இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை பொறுத்தவரையில், 1 - 6 - 2009க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும், 1 - 6 - 2009 அன்று மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதத்தையும் அப்போதிருந்த திமுக அரசு நிர்ணயம் செய்தது. திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட இந்த இரட்டைட நிலைப்பாடு தான் தற்போதைய ஊதிய வித்தியாசத்திற்கு காரணம் இந்த ஊதிய வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டதே திமுக ஆட்சியில் தான். இதற்கு மூல காரணமே திமுக தான் என்பதை மறைத்து அதிமுக ஆட்சியில் ஏற்பட்டது போன்ற ஒரு தோற்றத்தை திமுக தனது அறிக்கையில் உருவாக்கி உள்ளது. ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் திமுக செய்யும் என்பதை திமுக அரசின் நடடிவக்கைகளில் இருந்து எளிதில் அறிந்து கொள்ளலாம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், முந்தைய திமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டினை களையும் வகையில், உண்ணாவிதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக போச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.