அசாம் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோகாய்க்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோகாய் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து கடந்த அக்டோபர் 25-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக தருண் கோகாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்றுவந்த தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். காங்கிரஸின் மூத்த தலைவராக தருண் கோகாய், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகள் அசாம் மாநில முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.