முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான டிவி சேனலுக்கு பல்வேறு உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி ஊழல் செய்ததாக சசிகலா, தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது சிபிஐ, அமலாத்துறை ஆகியவை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி வருகிறார்.

டிடிவி.தினகரன் மீதான குற்றச்சாட்டு, மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என கடந்த மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மீண்டும் அமலாக்கத்துறை சார்பில், குற்றச்சாட்டுகள் புதிதாக பதிவு செய்து, அதற்கான விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சசிகலா மற்றும் பாஸ்கரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. பின்னர், சசிகலா மற்றும் பாஸ்கரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை, வரும் ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.