வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி, காஞ்சிபுரத்தில் பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி திமுக சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதன்முறையாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், கான்கிரீட் போடப்படாத விவசாய நிலத்தில் செருப்பு இல்லாமல் நடந்து ஆச்சர்யமூட்டியுள்ளார்.  

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’’விவசாயிகள் என்று சொல்லி ஏமாற்றும் விஷவாயுதான் எடப்பாடி. விவசாயிகள் துன்பங்களுக்கு துணை நிற்பவன்தான் இந்த ஸ்டாலின். காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முன் வரும் போது, அதை தட்டிக் கேட்க துணிச்சல் உள்ளதா? அதிமுகவுக்கு 8 வழிச்சாலை வரும் நேரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், தன்னை விவசாயி என கூறிக்கொள்ளும் எடப்பாடி அவர்களை அழைத்து பேசி உள்ளாரா? குடிமராமத்து திட்டம் மூலம் கொள்ளையடிக்கும் நீங்கள்தான் விவசாயியா? இந்த போலி விவசாயியை மக்கள் நம்ப மாட்டார்கள்’’என்று சாடியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு நமக்கு நாமே விடியல் பயணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டார். அப்போது சாலையில் நடப்பது, பேருந்தில் இருப்பவர்களிடம் நலம் விசாரிப்பது. மற்றும் டீ கடையில் சென்று டீ குடிப்பது என்று வித்தியாசமான முறையில் தன்னுடைய அரசியல் பரப்புரையை மேற்கொண்டார்.  கரூரில் கரும்பு தோட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்பதற்காக சென்றார். அங்கு ஸ்டாலின் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே வயலில் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்வை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். வயல் வெளியில் சிமெண்ட் ரோடு போட்டு சென்ற ஸ்டாலின், விவசாயி பிரச்சனையை எப்படி புரிந்து கொள்வார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல் குளங்களை தூர்வாரச் சென்ற உதயநிதி கண்மாய் வரை சிவப்பு தரைவிரிப்பான் போடப்பட்டு போய் பார்வையிட்டார். இதுவும் அப்போது சர்ச்சையானது. 

எடப்பாடி பழனிசாமி தனது நிலத்தில் இறங்கி கதிர் அறுவடை செய்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. அப்போது முதல் விவசாயிகளின் முதல்வர் என எடப்பாடியை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில் வேளாண் மசோதா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தான் தான் உண்மையான விவசாயி, தான் மட்டுமே விசவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்தவன் என எடப்பாடியும், மு.க.ஸ்டாலினும் விவாதம் நடத்தி வருகின்றனர். 

ஆனாலும், மு.க.ஸ்டாலின் கரும்புத் தோட்டத்திற்குள் கான்கிரீட் சாலை மோட்டு நடந்ததை மக்கள் அவ்வளவு எளிதாக கடந்து செல்லவில்லை. இதனை போக்கும் விதமாக வேளாண் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலின் விவசாய நிலத்திற்குள் முதன்முறையாக, செருப்பு அணியாமல், கான்கிரீட் சாலை போடாமல் நெற்பயிர்களை பார்வையிட்டார். அந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.