காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி-யும், நடிகையுமான ரம்யா கட்சியின் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ரம்யா, கடந்த 2014ஆம் ஆண்டு மாண்டியா நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு வந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 

ஆனாலும் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் திறமையாகப் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் கட்சி நடவடிக்கைகளைப் பதிவிட்டு கட்சியினரை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய சமூக வலைதளத் தலைவராக ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குமுன் இந்தப் பொறுப்பை, ரோதாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் ஜனதாதளம் கட்சிகள் வாக்காளர்களைக் கவரும் வண்ணம் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. 

இந்த நிலையில் ரம்யாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பு வருகிற சட்டசபைத் தேர்தலில் சமூக வலைதளப் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிதும் கைக்கொடுக்கும் என்று அந்தக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.