fishermen protest in kanyakumari

ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக் கொடியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர். குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களின் படகுகளும் மாயமாகி விட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்றவர்களில் ஒக்கி புயலில் சிக்கி 254 படகுகள் கரை திரும்பவில்லை. இதில் மீன்பிடிக்கச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகி னர்.

மாயமான மீனவர்களை இந்திய கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் தேடி வந்தனர். இதில் மராட்டியம், கோவா, குஜராத் மற்றும் லட்சத்தீவுகளில் குமரி மீனவர்களின் படகுகள் கரை ஒதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மாயமான மீனவர்கள் பற்றி அரசு தெரிவிக்கும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக மீனவர்கள் கூறி வருகிள்றனர்.ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பின்பே மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் பலியான மீனவர் குடும்பத்திற்கு கேரள அரசு ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறது. இதுபோல தமிழக அரசும் நிவாரண நிதி வழங்க வேண்டும், மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று மீனவ அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.



இதனை வலியுறுத்தி இன்று குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, புத்தன் துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, நீரோடி ஆகிய 8 மீனவ கிராம மக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் இன்று சின்னத்துறையில் இருந்து மார்த்தாண்டத்தை அடுத்த குழித்துறை நோக்கி நடை பயணம் தொடங்கினர். நித்திரவிளை, நடைகாவு, புதுக்கடை வழியாக குழித்துறை சென்று அங்கு ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.