புதுக்கோட்டை அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதற்காகவும், இந்துசமய அறநிலைத்துறை ஊழியர்களை தவறாக பேசியதற்காகவும் எச்.ராஜா மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், மோதல்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் எச்.ராஜா இதுவரை பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினாலும் அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.

இது தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. திருமுருகன் காந்தி, மன்சூர் அலிகான், சோபியா போன்றவர்கள் மீதெல்லாம் உடனுக்குடன் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் தமிழக அரசு, பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வகையில் பேசும் எச்.ராஜாவை ஏன் ஒன்றும் செயவ்தில்லை என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மத்தியில் ஆளும் பாஜக மீதான அச்சத்தில் எடப்பாடி அரசு மௌனம் காப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் இப்பிரச்சனையை இப்படியே விட்டு வைத்தால் அரசின் பெயர் முற்றிலும் டேமேஜ் ஆகிவிடும் என அரசு உணரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ராஜா மீது தமிழகத்தின் பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் திமுக எம்.பி. கனிமொழி குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தை தொட்ட விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியது.

பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், கனிமொழி குறித்து அவதூறாக பதிவிட்டிருந்தார். தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை எம்.பி. ஆக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல நிருபர்கள் கேட்பார்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்து போலீசில் புகார் அளித்தும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில்  கனியூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சமுதாயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் எச்.ராஜாவை இனியும் விட்டுவைப்பது சரியில்லை என எடப்பாடி அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.