மாஸ்டர் பட பாடல் வெளியீட்டு விழாவில் காப்புரிமை இல்லாமல் பிற படத்தின் பாடல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நோவெக்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களில் சிலவற்றின் பாடல் காப்புரிமை பெற்றுள்ளது. ஆனால் அவற்றின் உரிய அனுமதி இல்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அந்தப் பாடல்களில் ஆறு பாடல்கள் ஒளிபரப்பு செய்யப் பட்டுள்ளன. இதுகுறித்து அந்நிறுவனம் அளித்த புகார் மனுவில், 'நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் பாடல் வெளியிட்டு விழா கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் காப்புரிமை பெற்ற 5 படத்தின் 6 பாடல்களை சட்டவிரோதமாகவும் அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பட தயாரிப்பாள சேவியர் பிரிட்டோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கபட்டது. ஆனால் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றம், புகார் தொடர்பாக ஏன் விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிபிசிஐடி போலீசாருக்கு கேள்வி எழுப்பியது. மேலும், இந்த புகார் தொடர்பாக மாஸ்டர் படத்தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் சிபிசிஐடி போலீஸ் எஸ்பிக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.