FIR against Jear srivilliputhu
ஆண்டாள் விவகாரத்தில், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசவும், கல்வீசவும் தெரியும் என பேசி சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து பேசிய சொல் ஒன்று பெரும் எதிர்ப்புக்கு ஆளாகியது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வைரமுத்துவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தின. வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இது குறித்து விளக்கம் அளித்த வைரமுத்து, தாம் ஆண்டாள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், தனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர், வைரமுத்து ஆண்டாள் சந்நிதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதைத் தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜீயர், எந்த ஊரிலும், எந்தக் கடவுளையும் ரோட்டோரத்தில் மேடை போட்டு பேசக்கூடாது என்றும், சாமியார்களெல்லாம் இவ்வளவு நாள் சும்மா இருந்ததாகவும், இனிமேல் தங்களாலும் கல்வீசவும், சோடாபாட்டில் எடுக்கவும் முடியும் என்றும் காட்டமாக பேசினார்.
இதனிடையே வைரமுத்து நேரில் வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். ஆனால் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

இந்நிலையில் ஜீயர் பேச்சு வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாகவும் அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வைரவேல் என்பவர் சென்னை உயர்நிநீமன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஜீயரின் பேச்ச வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தால் அவர் மீது வழக்கு தொடரலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து ஜீயர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறதா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
