final verdict on kaveri water dispute

நூற்றாண்டு கடந்து தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதையடுத்து தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், கர்நாடகா, தமிழகத்துக்கு 10 மாத கால இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கோரியது. அதேவேளையில் கர்நாடகா, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை 132 டிஎம்சியாக குறைத்து உத்தரவிடக்கோரி மேல்முறையீடு செய்தது. இதே போல கேரளாவும், புதுச்சேரியும் கூடுதல் நீரை திறந்துவிடக்கோரி மேல்முறையீடு செய்தன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் அமித்வ ராய், கான் வில்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, காவிரி மேல்முறையீட்டு வழக்கை வாரத்தில் 3 நாட்கள் வீதம் தினமும் வேகமாக விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, கர்நாடக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், மத்திய அரசின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உட்பட கேரளா, புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களும் இறுதி வாதம் செய்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அனைத்து தரப்பு வாதங்களையும் தெளிவாக கேட்ட நீதிபதிகள், இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது. காவிரி விவகாரத்தில் இறுதித்தீர்ப்பு வர உள்ளதால், தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.