Asianet News TamilAsianet News Tamil

தம்பி வா... தலைமையேற்கவா! என்றால் ஜெயிக்க முடியாது! களப்பணி செய்தால்தான் ஜெயிக்க முடியும்! கொந்தளிக்கும் அழகிரி!

Field work can be successful only - M.K. Azhagiri
Field work can be successful only - M.K. Azhagiri
Author
First Published Dec 27, 2017, 11:34 AM IST


வெறுமனே வேனில் நின்றபடி வாக்கு கேட்டால் வெற்றி கிடைக்காது என்றும், களப்பணி ஆற்றினால்தான் வெற்றி கிடைக்கும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்ட நிலையிலும், திமுக வெற்றி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி, திமுகவில் மாறுதல் தேவை என்று கூறியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது, வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுகவில் மாறுதல் தேவை என்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோற்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வெறுமனே வேனில் நின்றபடி வாக்கு கேட்டால் வெற்றி கிடைக்காது. களப்பணி ஆற்ற வேண்டும். களப்பணி செய்தால்தான் திமுக வெற்றி பெற முடியும். ஆர்.கே.நகரில் தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். தம்பி வா, தலைமையேற்கவா என்றால் ஜெயிக்க முடியாது. களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

ஆர்.கே.நகரில், திமுகவினரை பணத்துக்காக விலைபோனதாக கூறலாமா? திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டு விட்டதாக துரைமுருகன் கூறுவது தவறு என்றார். துரைமுருகன் கூறியது, கட்சியினரை அவமானப்படுத்துவது போல் உள்ளது. இதற்கு திமுகவினர், துரைமுருகனுக்கு கருப்புக்கொடி காட்டியிருக்க வேண்டும்; துரைமுருகன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றார். வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து சொல்கிறார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதுபோன்றவர்களுக்குத்தான் திமுகவில் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்.

திமுகவில், அனைத்தையும் மாற்ற வேண்டும். சுயநலத்துடன் கட்சியில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். உண்மையான விசுவாசிகளுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும். ஆனால், அதெல்லாம் இப்போது நடக்குமா? என்று அழகிரி கேள்வி எழுப்புகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios