ஆயுதப்பூஜை, தீபாவளி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ஆயுதப்பூஜையை முன்னிட்டு வருகின்ற 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை வருவதால் சிறப்பு பேருந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து 3 நாட்கள் 6,145 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து 280 பேருந்துகளும், கோவையில் இருந்து பிற ஊர்களுக்கு 717 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து பிற ஊர்களுக்கு 245 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை முடிந்த பிறகு அக்டோபர் 8 முதல் 9-ம் தேதி வரை பிற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அதேபோல், தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் 5 இடங்களில் அக்டோபர் 24, 25, 26-ம் தேதி வரை வரை சென்னையில் இருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அக்டோபர் 27 முதல் 30-ம் தேதி வரை வரை 4,627 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையம், மெப்ஸ், பூந்தமல்லி, தைதாப்பேட்டை உள்ளிட்டவைகள் தற்காலிக பேருந்து நிலையங்களாக அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.