February 3 Is apologizing?
தமிழ்த்தாய் விவகாரத்தில் காஞ்சி இளையமடாதிபதி விஜயேந்திரரும், ஆண்டாள் குறித்த சர்ச்சையில் வைரமுத்துவும் பிப்ரவரி 3 ஆம் தேதி மன்னிப்பு கேட்க வேண்டும் என இரு தரப்பு கூறி வருகிறது.
தினமணி நாளிதழ் சார்பில், ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை படித்தார். அந்த கட்டுரை மறுநாள் அந்த நாளிதழிலும் இடம்பெற்றது.

அந்த கட்டுரையில் வெளிநாட்டு ஆய்வாளரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்புகளும் வைணவர்களும் வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர். வைரமுத்துவும் நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனும் ஆண்டாள் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதிலும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை மிகழும் இழிவாகவும் கொச்சையாகவும் வசைபாடினார். பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனோ, வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசு அறிவித்தார். இதனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஜீயர், உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார்.

இந்த சர்ச்சை முடிவடைவதற்குள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எழுதிய தமிழ் - சமஸ்கிருத அகராதி அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மேடையில் இருந்த ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, விஜயேந்திரர், நாற்காலியில் அமர்ந்து கொண்டர். அவரின் செய்கை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி மடம் அரிய விளக்கம் ஒன்றை தந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
விஜயேந்திரருக்கும், வைரமுத்துவுக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரு தரப்பும் கூறி வருகிறது. பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடப்பது என்ன என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!
பிப்ரவரி 3 ஆம் தேதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜயேந்திரருக்கு எதிராகவும், வைரமுத்துவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருவது குறித்து, மன்னிப்பு கேட்கும் நாளா பிப்ரவரி 3? நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
