விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாங்குடியில் ரேஷன் கடையில் ஜூன் மாதத்துக்கான விலையில்லா அரிசி மற்றும் பொருட்கள் வழங்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ஊரடங்கை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்துக்கான விலையில்லா அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு 50 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, இலவச மின்சாரம் வழங்குவது தொடரும். ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தவறு நடப்பது குறித்து அரசின் கவனத்துக்கு வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’எனத் தெரிவித்தார்.