காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விலியுறுத்தி சென்னையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின்போது அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தர ஆளுநர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட விவசாயிகள் முயன்றனர். 

விவசாயிகளுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நியாயமான கோரிக்கைக்காக போராடும் தங்களை போலீசார் தடுத்து நிறுத்துவது கண்டனத்திற்குரியது என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடியதால் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விவசாயிகளை கைது செய்யும் பொருட்டு ஏராளமான போலீசார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. விவசாயிகளின் திடீர் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.