விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், டெல்லியில் பிரதமர் வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஆண்டு சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், தற்போது மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராகவும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார் அய்யாக்கண்ணு. 

சிவகங்கை மாவட்ட கிராமங்களில் மரபணு மாற்று விவசாயத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அய்யாக்கண்ணு.

அப்போது தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, நீதிமன்ற அனுமதி பெற்றும் மரபணு மாற்ற விவசாயத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் எங்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்த முயல்கின்றனர். இந்த அத்துமீறல்களை பார்க்கும்போது, நமது நாடு ஜனநாயக நாடா? அல்லது சர்வாதிகார நாடா? என்ற ஐயம் எழுகிறது என்றார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்றால், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம் என எச்சரித்தார்.