பானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

வங்கக்கடலில் உருவான பானி புயல், நேற்று முன்தினம் காலை ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 முதல் 250 கிமீ வரை பலத்த காற்று வீசியது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, மேற்கூரைகள் பறந்தன. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் 30 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் மட்டுமே 10 ஆயிரம்  மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு 4 ஆயிரம் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்த சூழ்நிலையில், பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் அளிப்பதாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஒடிசா மக்களுடனான ஒத்துழைப்பையும் தெரிவிக்கும் விதமாக இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பலிருந்து மீண்டு வர ஒடிசாவுக்கு தேவையான உதவிகளைச் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.