விரைவில் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினியின் ரசிகர் மன்றமான மக்கள் மன்றத்தில் ஏராளமான பெண்கள் மிக ஆர்வத்துடன் சேர்ந்து வருவது அவரை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. கட்சி ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்த உடனே ரசிகர் மன்றத்தில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாயிகள் அணி, மீனவர்கள் அணி, இளைஞர் அணி என பல்வேறு அணிகளை உருவாக்கிய ரஜினி நிர்வாகிகளை உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டும் படி கூறியிருந்தார். அதன் படி தமிழகம் முழுவதும் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை பணிகளில் மக்கள் மன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 உறுப்பினர் சேர்க்கை பணிகளை மக்கள் மன்றத்தின் அமைப்பாளர் இளவரசன் நேரடியாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் எத்தனை உறுப்பினர்கள் சேர்கிறார்கள், உறுப்பினர் சேர்க்கை ஜெனியூனாக நடைபெறுகிறதா என்பதையும் இளவரசன் கிராஸ் செக் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த 3 மாதமாக ரஜினி ரசிகர் மன்றத்தில் பெண்களின் சேர்க்கை அதிகமாகியுள்ளது. கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி அறிவித்த முதல் மூன்று 5 மாதங்களை ஒப்பிடும் போது கடந்த மூன்று மாதங்களில் பெண்கள் உறுப்பினராவது மிகவும் அதிகரித்துள்ளது.

 இதனை தொடர்ந்து மகளிர் அணியை பலப்படுத்தி பெண்களுக்கு கட்சியில் முக்கி பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என்கிற முடிவுக்கு ரஜினி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெண்களை உறுப்பினர்களாக்கும் நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சென்னையில் மகளிர் அணியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஜினி திடீரென கலந்து கொண்டு நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். 

இதன் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு முன்னர் மகளிர் அணியின் மாநில பொறுப்பாளரான காயத்ரி துரைசாமியை தனது வீட்டுக்கே வரவழைத்து ரஜினி பேசியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்குள் மட்டும் ரஜினி, மகளிர் அணி பொறுப்பாளர் காயத்திரியை மூன்று முறை சந்தித்துள்ளார். இதன் மூலமாகவே ரஜினி மகளிர் அணியை பலப்படுத்துவதில் எவ்வளவு ஆர்வமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் காயத்ரியுடன் ரஜினி பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் மக்கள் மன்றத்தில் பெண்களின் செயல்பாடு தொடர்பான வீடியோக்களையும் ரஜினியிடம் காயத்ரி காட்டியுள்ளார். அந்த வீடியோவையும் ரஜினி ஆர்வத்துடன் பார்த்துள்ளார். தொடர்ந்து பெண்களை உறுப்பினராக்குவதை அதிகரிக்குமாறு காயத்ரிக்கு ரஜினி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.