காலக் கெரகம்டா சாமீ! - என்று சில விஷயங்கள் நம்மை தலையில் அடிக்க வைக்கும். அப்படியானவற்றில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்க்க இருப்பது. ஜே.பி. நட்டா சமீபத்தில் தமிழகத்துக்கு வந்தார். அப்போது தமிழகத்தில் இன்னும் வளராமல் தவிக்கின்ற பா.ஜ.க.வை கைதூக்கி விடுவதற்கான ரகசிய சூத்திரங்களை வழங்கிச் செல்வார்! என பெரிதாய் எதிர்பார்த்தனர். இதற்காக பல  வகையான கேள்விகள்,  ஆலோசனைகள், கருத்துகள், கெஞ்சல்கள் நிரம்பிய ஃபைல்களுடன் காத்திருந்தனர் பா.ஜ.க. நிர்வாகிகள். 
ஆனால் நட்டாவின் ஒன் டே விசிட்டோ, உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் விமர்சனத்தில் வெச்சு, வகையாக செய்யப்படும் படியாக அவர் முன்னிலையில் நடிகை நமீதா, நடிகர் ராதாரவி இருவரும் அக்கட்சியில் இணைந்தனர். 

பெண்களை தொடர்ந்து அவதூறாக பேசி வரும், நடிகர் சங்க நிர்வாகத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளானவருமான ராதாரவியை நம் கட்சியில் இணைப்பதா? நமீதா எப்படியான கதாபாத்திரங்களில் நடித்தார், இவரெல்லாம் வந்துதான் நம் கட்சி மலரணுமா? என்று சாட்டையடி கேள்வி கேட்டனர் தொண்டர்கள். ஆனால் மாநில நிர்வாகிகளால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. வெறுமனே கை பிசைந்து நின்றனர். இந்த நிலையில் நமீதா மீடியாக்களை சந்தித்து, பா.ஜ.க.வில் தான் ஆற்ற இருக்கின்ற அரசியல் அதிரடிகள் குறித்துப் பேசியிருக்கிறார். அதில் தமிழகத்தில் தாமரையை மலர வைப்பது குறித்து அவர் சொல்லியிருக்கும் கருத்துக்கள்தான் அரசியல் பார்வையாளர்களை தலையிலடிக்க வைத்துள்ளன. 
அவற்றில் சில ஹைலைட் பாயிண்டுகள்....

*    தேசிய கண்ணோட்டத்துடன் சிறப்பான ஆட்சி, வளர்ச்சிப்பாதையில் நாட்டை கொண்டு செல்லுதல், வெளிப்படையான நிர்வாகம், எல்லை பாதுகாப்பில் அக்கறை இவற்றை சிறப்பாக செயல்படுத்துவதால் நான் பா.ஜ.க.வில் இணைந்தேன்.
*    பிரதமர் மோடியை சந்திக்கும் போது, பொது நலன் குறித்த என் கருத்துக்களை அவரிடம் சொல்வேன். 
*    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எனக்கு அ.தி.மு.க.வில் முக்கியத்துவம் தரப்படவில்லை. எனவே அக்கட்சியிலிருந்து விலகினேன்.
*    தமிழக மக்களின் மனதில் பா.ஜ.க. இல்லை என்று சொல்லிவிட முடியாது. என்னைப் போன்றவர்களின் பிரசாரம் மூலம் பா.ஜ.க.வை மக்கள் மனதில் இடம்பெற செய்ய முடியும். 
*    என்னால் தமிழக மக்களை மாற்ற முடியும். 
*    தமிழகத்தில் உடனடியாக தாமரையை  மலர வைக்க முடியாது. படிப்படியாக அதற்கான வேலைகள் நடந்து முடிந்த பிறகு நிச்சயம் தாமரை மலரும். அதை மலரச்செய்வதில் என் பங்கு, சேவை பெரிதாய் இருக்கும். என்று சொல்லியிருக்கிறார் நமீதா. 

இதையெல்லாம் சொல்லித்தான் தலையிலடித்துக் கொள்ளும் அரசியல் பார்வையாளர்கள், சர்வதேச தலைவராக உயர்ந்திருக்கிறார் மோடி. அவரது கட்சியோ முரட்டு மெஜாரிட்டியுடன் இந்த தேசத்தில் தன் ஆட்சியை இரண்டாவது முறை தக்க வைத்திருக்கிறது. ஆனால் அதே தேசத்தினுள் வரும் ஒரு மாநிலத்தில் அக்கட்சியானது இப்படி மாஜி நடிகையை நம்பியெல்லாம் ஒக்காந்திருக்க வேண்டி இருக்கிறது. தமிழக மக்களின் மனதை பா.ஜ.க.வுக்கு சாதகமாக மாற்ற முடியும்! என்று நமீதா பேசுகிறார். இதை பொன்னாரும், வானதியும், சி.பி.ராதாகிருஷ்ணனும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவலமல்லாவா இது! நாங்கள் நமீதாவை தவறாக சித்தரிக்கவில்லை. 

ஆனால், நமீதாவால் இதற்கு முன் அவர் இருந்த அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வாக்குகள் எவ்வளவு? அவர் அங்கே அரசியலில் என்ன சாதித்துவிட்டார்? அவர் அக்கட்சிக்கு வந்ததும் தெரியவில்லை,  வெளியேறியதும் தெரியவில்லை. இந்த நிலையில் இப்போது பா.ஜ.க.வுக்குள் நுழைந்து கொண்டு, தன்னை மீண்டும் லைம் லைட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். ராதாரவியின் கதையோ நமீதாவை விட மிக மிக மோசம். ஆக இப்படியான நபர்களின் விளம்பர டப்பாவாகத்தான் பயன்படுகிறது பா.ஜ.க.! என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்கின்றன. நாட்டை ஆளும் பா.ஜ.க. இப்படி தமிழகத்தில் அசிங்கப்படணுமா?” என்கிறார்கள்.