பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற 21ம் தேதி தமிழகம் வர உள்ளார். சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து அமித் ஷா ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிகிறது. இவரது வருகை தமிழக பாஜகவிற்கு உத்வேகம் ஊட்டும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவின் வருகை குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு திமுக, அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்;- குடும்ப அரசியல் குறித்து காங்கிரசிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? பல மாநிலங்களில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர். 

பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலை கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு, தமிழக நிலவரம் வேறு; திமுகவை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம் அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த எல். முருகன் கருத்து பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல என்றார்.