என்ஐஏ போல் நடித்து ரூ.20 லட்சம் கொள்ளை அடித்த பாஜக நிர்வாகிகள்.. அதிரடி நடவடிக்கை எடுத்த கரு. நாகராஜன்..!
என்ஐஏ அதிகாரி என கூறி தொழிலதிபரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி வேங்கை அமரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

என்ஐஏ அதிகாரி என கூறி தொழிலதிபரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் கைதான பாஜக நிர்வாகி வேங்கை அமரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் ஜமால்(40) என்பவர் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த 12ம் தேதி வந்த 6 பேர் கொண்ட கும்பல் மர்மநபர்கள் ஜமாலிடம் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்றும், உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ஜமாலின் வீட்டில் இருந்து 10 லட்ச ரூபாய் எடுத்து சென்ற மர்ம கும்பல், ஜமாலின் செல்போன் கடைக்கு சென்று அங்கிருந்தும் சோதனை என்கிற பெயரில10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றது. இதனையடுத்து என்ஐஏ போலீசார் சோதனை நடத்தியதாக வெளியான தகவலையடுத்து முத்தியால் பேட்டை போலீசார் ஜமாலிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னிடம் இருந்து ரூ. 20 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது என்ஐஏ அதிகாரிகள் இல்லையென்றும் கொள்ளை கும்பல் என தெரியவந்தது.
இதனையடுத்து ஜமால் வீடு மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராயபுரத்தைச் சேர்ந்தவரும், பாஜக நிர்வாகியுமான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி என தெரியவந்தது. இதனையடுத்து இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இரண்டு பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பட்டியல் அணியின் மாவட்ட பொதுச்செயலாளர் வேலு மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.