மயிலை பார்த்து வான்கோழி ஆடிய கதையாகி விட்டது எடப்பாடி பழனிசாமி அணியினரின் நிலைமை. செந்தில் பாலாஜி கரூரின் இணயும் விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதால் அதனை ஓவர் டேக் செய்யும் விதமாக எடப்பாடி அணி சென்னையில் நடத்திய விழா புஸ்வானமாகி போனது. 

அமமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இதற்காக கரூரில் ஸ்டாலின் தலைமையில் அவரது ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை காசை தண்ணீராக இரைத்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை இன்று நடத்த இருக்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு ஒரு லட்சம் பேரை திரட்டுவதற்கான பணிகளிலும் செந்தில் பாலாஜி ஈடுபட்டுள்ளார். 25 ஆயிரம் பேரை அப்போது திமுகவில் இணைக்க இருக்கிறார் செந்தில் பாலாஜி. இந்த விழா திமுகவை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்தும் அச்சாரமாகவே பார்க்கப்பபடுகிறது. இதனால் அதிமுக ஆட்டம் கண்டு வருகிறது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை ஈடுகட்டும் வகையில், கரூரை சேர்ந்த அமமுக, திமுக மதிமுக கட்சியிலிருந்து விலகி வந்த 2500 இணைக்கும் விழாவை சென்னையில் இன்று நடத்த திட்டமிட்டார் எடப்பாடி பழனிசாமி. இந்த இணைப்பு நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதிமுக தலைமை அலுவலகம் அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 12.30 மணி வரை அந்த விழா நடத்தப்படவில்லை. அந்த திருமண மண்டபத்திற்குள் பத்திரிகையாளர்களையும் அனுமதிக்கவில்லை.

 

காரணம் விழாவுக்கு வந்த ஆட்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதைச் சமாளிக்க சென்னை நகரை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆட்களை திரட்டி வருமாறு மா.செ.க்களுக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஆட்கள் வர தாமதமானதால் விழாவுக்கு தலைவர்கள் வருவதும் தாமதமானது. ஆனால் விழா நடத்தவில்லை என்றாலும் அவமானம். இதனால், உள்ளூர்வாசிகள், கரூரில் இருந்து வந்திருந்த அதிமுகவினர் 387 பேர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர்.

இதுகுறித்து அந்த மண்டபத்தை சுற்றியிருந்த சிலர் கூறுகையில், ‘’2500 பேர் இணைவதாக சொன்னார்கள். ஆனால், கரூரில் இருந்து வந்தவர்கள் நூறு பேர் மட்டும்தான் இருக்கும். அவர்களும் வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. அதிமுகவை சேர்ந்தவர்கள்தான். கரை வேட்டி கட்டாமல் விழாவுக்கு அவர்களை அழைத்து வந்திருந்தனர். மிகக் குறைவானர்கள் வந்ததால் சென்னையில் லோக்கல் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்களை அழைத்து வந்தனர். அப்படி இருந்தும் கூட்டம் சேராததால் கூடிய 387 பேரை மட்டும் கட்சியில் சேர்ப்பதாக விழா எடுத்து முடித்து உள்ளனர்’ என்கின்றார்கள்.