அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு பதவியை நீட்டித்திருப்பது தமிழக ஆளுநருக்கு அழகல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அஞ்சல் துறையின் தேர்வுகள் கடந்த முறை தமிழில் நடத்தப்பட்டது. ஆனால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்துவது என்பது பாஜக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதாகும். இந்தி திணிப்பு, சமஸ்கிருத அங்கீகாரம் போன்றவற்றில் பாஜக தீவிரமாக உள்ளது. மாணவர்களுக்கு தமிழக அரசு 2 ஜிபி டேட்டாவை இலவசமாக அறிவித்துள்ளது. தேர்தலுக்காக அதிமுகவினர் அதிக வாக்குறுதிகளை அள்ளிவிடுகின்றனர். ஆனால், அவர்கள் எதையும் நிறைவேற்றபோவதில்லை.
தமிழக ஆளுநர் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நியமித்தது சீமையில் இல்லாத உத்தமன் போல் ஊழல்கள் ஊர் சிரிக்கிறது. ஊழல் தொடர்பாக அவர் மீது விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடைய பதவியை நீட்டித்திருப்பது தமிழக ஆளுநருக்கு அழகல்ல. திமுக அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி சாத்தியமில்லை என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் ஏற்கனவே ஆட்சியிலிருந்த போது விவசாய கடனை தள்ளுபடி செய்து அதை நிரூபித்துள்ளோம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை நடந்தால் உங்களிடம் தெரிவிக்கிறோம். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்பதை இப்போது எதுவும் சொல்ல முடியாது.” என்று துரைமுருகன் தெரிவித்தார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 15, 2021, 9:45 PM IST