பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். பின்னர், சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் தரப்பில் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 5 முறை ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக அவரது குடும்பத்தினர் மூலமாக டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். இதுகுறித்து நேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் " கிராமப்புற தேவையில் ஏற்பட்ட மந்த நிலையால் நுகர்வோர் செலவினம் கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2017-18-ல் குறைந்து போனதாக தேசிய புள்ளியியல் அலுவலக ஆய்வு தெரிவித்தது. 

அந்த அலுவலகத்தின் ஆய்வு முடிவுகள் முறையான அனுமதி பெற்று நடப்பாண்டு ஜூன் 19-ல் வெளியிடப்பட்டன. அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பின்னர் அந்த ஆய்வு முடிவுகள் அரசால் திரும்பப்பெறப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரமும் அரசால் மூடி மறைக்கப்பட்டது. இதுதான் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல்களுக்கான உரிமை பெறும் நிலையாகும் என்று விமர்சனம் செய்துள்ளார்.