அண்மையில் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதால் கடும் அப்செட்டில் இருக்கும் மணிகண்டன் அதிமுகவிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து நீக்கினார். அந்தப் பொறுப்பு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. கடந்த 2017 பிப்ரவரியில் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட முதல் அமைச்சர் மணிகண்டன்தான்.
தமிழக அரசின் கேபிள் டிவி நிறுவன  தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலை ராதாகிருஷ்ணன் கேபிள் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்தார். ஆனால், அத்துறை அமைச்சரான தன்னிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுத்ததால், காட்டமான மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்திவரும் கேபிள் டிவி தொழிலைப் பற்றி பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாகப் பேசினார்.  ‘முதல்வரும் இதுபற்றி தன்னிடம் ஆலோசனை நடத்தவில்லை’ என்று மணிகண்டன் எடப்பாடி பழனிச்சாமியைக் குறிப்பிட்டும் பேசினார். இதன் தொடர்ச்சியாக மணிகண்டன் அடுத்த நாளே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்தார்.
பதவி பறிப்புக்குப் பிறகு மணிகண்டன் துணை முதல்வர் ஓபிஎஸ், மற்றும்  தனக்கு நெருக்கமான அமைச்சர்களுக்கு போன் போட்டு பேசி புலம்பித் தீர்த்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் அமைச்சர்கள் சிலரைப் பற்றியும் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாயின. அமைச்சர் பதவிலிருந்து நீக்கியதால், இன்னும் அதை ஜீரணிக்க முடியாதவராக இருப்பதாக மணிகண்டனின் ஆதரவாளர்களும் கூறுகிறார்கள். தன்னை உதாசீனப்படுத்தியவர்களுக்கு தான் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் பேசியதாகவும் சொல்கிறார்கள்.

 
தொடர்ந்து அதிருப்தியில் இருந்துவரும் மணிகண்டன் கட்சியிலிருந்து விலகினாலும் ஆச்சரியமில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. அப்படி ஒரு முடிவெடுத்தால், எம்.எல்.ஏ. உதறி தள்ளிவிட்டு அவர் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் ராமநாதபுர அதிமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.