EVKS Elangovan Pressmeet

தற்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முடங்கிப்போய் உள்ளது என்றும், அரசியல் சூழ்நிலையை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளிவந்த மெர்சல் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. மெர்சல் படத்தில் வந்த சர்ச்சை வசனங்கள் குறித்து தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங். கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், மெர்சல் திரைப்படம் குறித்த விவாகரத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவிப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவர் மனதில் மகாராணியாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறினார்.

தமிழக அரசில் இருக்கும் அமைச்சர்களுக்கு யார் பிரதமர் என்றே தெரியவில்லை என்றும், அவர்களை வைத்து நடக்கும் அரசு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய தேவை இல்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி முடங்கிப்போய் உள்ளது என்றும், தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.