துணை முதல்வா யார் காலில் விழுந்தாலும் அவர் பையனும் வெற்றி அடைய போவதில்லை என்று தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். 

தேனிக்கு அவசர அவசரமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கிய தகவல் அறிந்த காங்கிரஸ், திமுகவினர் உள்ளிட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது அம்பலமாகியுள்ளது. தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் வர வேண்டிய அவசியம் என்ன? இப்போது வரை தேர்தல் ஆணையத்திடம் இருந்து முறையான பதில் இல்லை! சந்தேகம் வலுத்துள்ளது.

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி கட்சியினருடன்  மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்தார். 

இந்த புகார் மனுவில்,  புதிதாக கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு மெஷின்களை மீண்டும் கோவைக்கே எடுத்துச் செல்ல வேண்டும். இந்த பாராளுமன்ற தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான அவசியமே ஏற்படவில்லை. அதுபோன்ற நிலையில் மீண்டும் இரண்டு மையங்களில் வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என கூறுவது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;  நடந்து முடிந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் சிறப்பாக எந்தவித பிரச்சனையும் இன்றி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடந்து முடிந்துள்ளது. ஆகவே மறு தேர்தல் நடத்த அவசியமே இல்லை என்று  மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கூறியுள்ளோம்.

மேலும் கோவையில் இருந்து அவசர அவசரமாக கொண்டுவந்த 50 மெஷின்களையும் திருப்பி அனுப்ப வேண்டும், என்பதையும் வலியுறுத்தி உள்ளோம். பன்னீர்செல்வமும், தோல்வி பயத்தால் வாரணாசி சென்ற போது, மோடியின் காலில் விழுந்து தனது பையனை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று கெஞ்சி இருக்கிறார். ஆனால் துணை முதல்வா யார் காலில் விழுந்தாலும் அவர் பையனும் வெற்றி அடைய போவதில்லை என்று கூறினார்.