அண்மையில் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர் அமைப்புகளும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராடி வருகின்றனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் தாக்கப்பட்டனர். அதை எதிர்த்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது.

தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. திமுக சார்பாக நாளைக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளுக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்திருக்கிறது. பேரணியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். குடியுரிமை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக சார்பாக இரண்டு நாட்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனிடையே குடியுரிமை சட்டத்தின் படி தாங்கள் இந்தியர் என்று நிரூபிக்க தவறியவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என பாஜக தேசிய செயலாளர் ஹச். ராஜா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 1950 பிறகு இந்தியாவிற்குள் நுழைந்தவர்களுக்கு ஆவணம் இல்லை என்றால் அவர் இந்தியர் இல்லை என்று கூறியிருக்கிறார். 2014 டிசம்பர் 31 ம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் இந்துவாக இருந்தாலும் 5 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்ததற்கான ஆவணங்களை கொடுத்தால் தான் இந்தியர்  என்றும் இல்லையெனில் நாடுகடத்தப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன ஹச்.ராஜாவின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சைகளை அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளது.