முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக தினமும் ஒரு பூஜை வாரம் ஒரு யாகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு பரபரப்பாக காட்சியளிக்கிறது.

மே 23ம் தேதி வெளியாக உள்ள 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்காட்சி நீடிக்குமா நீடிக்காது என்பதை தீர்மானிக்கப் போகிறது. இடைத்தேர்தல் முடிவுகள் பாதகமாக வந்தாலும் கூட ஆட்சியை தொடர்வதற்கான சாத்தியங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அதன் அடிப்படையிலேயே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்றுபேரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் உறுதியுடன் இருந்து வருகிறார்.

இந்த மூன்று எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யும் போது சட்ட சிக்கல்களை எழுப்ப திமுக மற்றும் தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் உடன் தினமும் ஆலோசனை செய்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்குமா என்பது ஒரு சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். எனவே இந்த சிக்கலைத் தீர்க்கும் பொருட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் கடந்த மூன்று வாரங்களாகவே வாரம் ஒருமுறை சிறப்பு யாகம் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக அளவில் பிரபலமான ஜோதிடர்கள் கேரளா மாந்திரீகர்கள் என ஒரு கூட்டமே இதற்காக அவ்வப்போது சென்னை மற்றும் சேலத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்புடைய இடங்களுக்கு வந்து செல்வதாகவும் பேச்சு அடிபடுகிறது. தேர்தல் முடிவுகள் ஆக இருந்தாலும் சரி சட்ட சிக்கலாக இருந்தாலும் சரி இந்த பூஜை மற்றும் யாகங்கள் மூலம் வென்று விடலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையாக உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்போதுமே தெய்வ பக்தி உள்ளவர். அதன் அடிப்படையில்தான் இப்படி பூஜை யாகம் செய்து வருவதாகவும் இதில் சிறப்பாக அல்லது ஆட்சியைக் காப்பாற்ற எதுவும் இல்லை என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.