கலைஞரின் சபதத்தை நிறைவேற்றியவர் ஸ்டாலின் என எ.வ.வேலு புகழாரம் சூட்டினார். 

திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், திமுகவின் தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றுவரும் பொதுக்குழுவில் ஸ்டாலினை திமுகவின் தலைவராக அன்பழகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினை புகழ்ந்து பேசிவருகின்றனர். அப்போது ஸ்டாலினை புகழ்ந்து பேசிய எ.வ.வேலு, உழைப்பால் உயர்ந்தவர்; உழைப்பவர்களை மதிப்பவர்கள் ஸ்டாலின் என புகழாரம் சூட்டி உரையை தொடங்கினார். 

பின்னர், பெரியாரின் போராட்ட குணம், அண்ணாவின் கனிவு, கலைஞரின் உழைப்பு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியவர் ஸ்டாலின். ஸ்டாலின், திமுகவிற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழினத்திற்கே தலைவர். பெரியார், அண்ணா, கலைஞரை தொடர்ந்து நான்காம் தலைமுறை தலைவர் ஸ்டாலின் என புகழந்தார். 

ஸ்டாலினின் நிர்வாகத் திறமையை சொல்ல வேண்டுமென்றால் ஏராளாமான உதாரணங்கள் இருக்கின்றன. உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது அந்த துறையில் நல்லாட்சி செய்தவர். சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உயர்த்தியது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது என்று கூறிக்கொண்டே போகலாம். 

பெரியார் மற்றும் அண்ணாவின் கனவுகளை, ஆட்சி கட்டிலில் இருக்கும்போது நிறைவேற்றியவர் கலைஞர். ஆனால் அண்ணாவிடம் இரவலாக பெற்ற இதயத்தை கலைஞர் திருப்பித்தருவதாக எடுத்த சபதத்தை கலைஞர் இறந்ததும் நிறைவேற்ற முடியாத சூழல் உருவானது. சட்ட சிக்கல்களை காரணம் காட்டி ஆட்சியாளர்கள் மறுத்த நிலையில், கலைஞர் அரசியல் வாரிசு நான் இருக்கிறேன்; என்று சட்டரீதியாக போராடி கலைஞரின் சபதத்தை நிறைவேற்றியவர் ஸ்டாலின். கலைஞரின் சபதத்தை நிறைவேற்றியதற்காகவே நீங்கள் நூறாண்டு நலமுடன் வாழ்ந்து திமுகவின் தலைவராக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று எ.வ.வேலு புகழாரம் சூட்டினார்.