அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்... நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை.. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுக-வினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

திமுகவினர் வன்முறை- இபிஎஸ் கண்டனம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினருக்கு 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில, ஐந்து ஆண்டுகளுக்கு, தங்களுக்கு சேவை புரிய மக்கள் வாக்களித்தார்கள் என்பதை திமுக-வினர் மறந்துவிட்டு,

மாநிலமே தங்களுக்கு சொந்தமாகிவிட்டது போல் ஆட்டம் போடுவதும், அராஜகத்தில் ஈடுபடுவதும், அதை இவர்களுக்கெல்லாம் தலைவர் என்று மார்தட்டிக்கொள்ளும் திரு. மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (30.10.2023), கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோதல்

போக்குவரத்து மந்திரியின் உதவியாளர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுக-வினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன. திமுக-வினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த வன்முறையைத் தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்களையும் தி.மு.க. குண்டர்கள் தாக்கியதாகவும், 

Scroll to load tweet…

வீடியோ வெளியிட தயாரா.?

ஒப்பந்தப் புள்ளி வழங்க வந்தவர்களை திமுக-வினர் அடித்து விரட்டியதாகவும், இன்றைய நாளிதழ்களில் திமுக-வினரின் அராஜகங்கள் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளன.இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்திற்கு விரைந்து வராதது, இவர்களின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

 சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா ? "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த திராவக மாடல் ஆட்சியாளர்களின் கரங்களில் இன்றைக்கு தமிழகம் சிக்கி, மக்கள் அவதியுறுவது கொடுமையிலும் கொடுமை. 

மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

'சட்டமாகவும், சப்தமாகவும் பேசினால் மட்டும் போதாது; சட்டம் பொதுவானதாகவும், சப்தம் உண்மை உள்ளதாகவும் இருத்தல் அவசியம்’ என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுரையை, இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன். 30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக-வுக்கு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மின் கட்டணம் கட்டவில்லை என்று எஸ்எம்எஸ் வந்தால் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்- மின்சார வாரியம் எச்சரிக்கை