டி.டி.வி.தினகரன் உதவியாளரிடம் டெல்லி போலீஸ் விசாரணை…கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறல்…

இரட்டை இலை சின்னத்தை பெற 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி,தினகரன் உதவியாளர் ஜனார்தனனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளந்தது. இதையடுத்து சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் பஞ்சாயத்தை கூட்டினர்.

இதைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பிரச்சனையில் ஏஜெண்ட்டாக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போனில் உள்ள எண்கள் குறித்தும் விசாரனை நடத்தினர்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் ஜனார்த்தனன் திணறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.