தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சட்ட மன்ற கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.
பட்ஜெட்டை புறக்கணித்த அதிமுக
தமிழக சட்டப்பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட காரணங்களை கூறி அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழ்நிலை உருவான நிலையில் பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டநிலையில் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட் என்கிற பெயரில் விவசாயிகளை திமுக ஏமாற்றியுள்ளதாக விமர்சித்தார். மேலும் வேளாண் பட்ஜெட்டிற்கு பதிலாக கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் வாசித்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார்.

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, திங்கட் கிழமை முதல் புதன் கிழமை வரை பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்குவதற்காக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கொறடா வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவையில் பிரச்சனை எழுப்புவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தேர்தல் வாக்குறுதி ?
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மாதம் ஒரு முறை மின் கட்டணம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ள விவாதத்தில் அதிமுக சார்பாக பேசவுள்ள உறுப்பினர்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
