electricity power cut to sterlite
ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பை தமிழக அரசு அதிரடியாக துண்டித்துள்ளது. இன்று அதிகாலை 5.15 மணி முதல் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரிக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 18 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் லைசென்ஸ் முடிவடைந்தததையடுத்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் அந்த ஆலை மூடப்பட்டது
அதே நேரத்தில் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான சான்றிதழை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது. இதையடுத்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில்தான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் 100 வது நாள் போராட்டம் நடைபெற்ற போது பயங்கர வன்முறை வெடித்தது.

கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தவர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 11பேர் பலி ஆனார்கள். மேலும் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி ஆனார். இந்த இரு சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஸ்டேர்லைட் ஆலை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து உடனடியாக களம் இறங்கிய தமிழக அரசு இன்று அதிகாலை 5.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட மின இணைப்பை துண்டித்தது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்த ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது போராட்டக்களத்திற்கு கிடைத்த மதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
