தமிழ்நாட்டு அரசியலில் கோலோச்சிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் அரசியல் களத்தில் இல்லாத சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் புதிய தலைமைகளின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

அதிமுக:

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக பல இன்னல்களையும் மாற்றங்களையும் சந்தித்தது. பன்னீர்செல்வம் போர்க்கொடி, சசிகலாவிற்கு சிறை தண்டனை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவிட்டு பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அணிகள் இணைந்தது, தினகரன் தனிக்கட்சி தொடங்கியது என அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அதிமுக தோற்றது, அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. அதே நேரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி, அவருக்கு நம்பிக்கையை அளித்தது. அதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். 

நீட் உள்ளிட்ட பல விவகாரங்களில் அதிமுக அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. ஜெயலலிதா தைரியமாக மத்திய அரசை எதிர்த்து கையாண்டிருப்பார் என்று ஜெயலலிதாவுடனான ஒப்பீடும் செய்யப்பட்டது. ஜெயலலிதா என்ற தனிப்பெரும் ஆளுமைக்கு அடுத்து பழனிசாமி-பன்னீர்செல்வம் ஆகிய கூட்டுத்தலைமையின் கீழ் அதிமுக வழிநடத்தப்படுகிறது. ஜெயலலிதாவின் தலைமைக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

திமுக:

அதிமுகவிற்கு ஜெயலலிதா என்ற தலைமை இல்லாதது இழப்பு என்றால், அதேநிலைதான் திமுகவிற்கும்.. திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வினால் அரசியலிலிருந்து ஒதுங்கியதால், திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டு, கட்சியை வழிநடத்தி வருகிறார். ஸ்டாலினின் செயல்பாடுகளை திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒப்பிட்டு பரவலான விமர்சனம் உள்ளது. எனினும் ஒவ்வொருவரின் தலைமை பண்பும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படும் என்பது எவ்வளவு நிதர்சனமோ, அதேபோல் மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் எண்ணமும் அவர்களின் பார்வையும்தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்பதும் உண்மை. 

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தற்போது புதிய தலைமைகளின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் நடத்திய ஆய்வில், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பலவீனப்பட்டிருக்கின்றனவா? என்ற கேள்வியை முன்வைத்து 11,691 பேரிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

திமுக மீதான மக்கள் பார்வை:

அதனடிப்படையில், திமுக பலவீனமடைந்திருக்கிறது என திமுகவின் கோட்டையாக திகழ்ந்த சென்னையில் 57% பேரும் தென் மண்டலத்தில் 59% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். கொங்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் தலா 34% பேர் திமுக பலவீனமடைந்திருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மாவட்டங்களை பொறுத்தமட்டில் 27% மட்டுமே திமுக பலவீனமடைந்து இருப்பதாக கருதுகின்றனர்; ஆனால் 50% வலுவாக இருப்பதாகவே கருத்து தெரிவித்துள்ளனர். திமுக இதுவரை பெரும் ஆதரவு இல்லாத கொங்கு மண்டலத்தில் கூட, திமுக வலுவாக இருப்பதாக 38% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக மாநில அளவில், 41% திமுக பலவீனம் அடைந்திருப்பதாகவும் 36% பேர் திமுக பலமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அதிமுக மீதான மக்கள் பார்வை:

அதிமுகவை பொறுத்தவரையில் தினகரன் தனியாக ஒரு அமைப்பை தொடங்கி செயல்பட்டுவருவதால், அது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வே முடிவின் அடிப்படையில், அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த கொங்கு மண்டலத்தில் 60% பேர் அதிமுக பலவீனமடைந்திருப்பதாகவும் வெறும் 13% பேர் மட்டுமே பலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டல மக்களின் இந்த கருத்து அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த அப்பகுதியில் தற்போது அதிமுக சரிவை சந்தித்துள்ளதை காட்டுகிறது. 

வட மாவட்டங்களில் 69% பேரும் சென்னையில் 67% பேரும் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் தலா 55% பேரும் அதிமுக பலவீனமடைந்து இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக மாநில அளவில், 60% பேர் அதிமுக பலவீனமடைந்து இருப்பதாக கருதுகின்றனர். அதில் மூன்றில் ஒரு பங்கான 20% பேர் மட்டுமே அதிமுக பலமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே முடிவின் அடிப்படையில், திமுகவைவிட அதிமுக தான் அதிகமாக பலவீனமடைந்து இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். திமுக பலவீனமடைந்திருப்பதாக 41% பேரும் அதிமுக பலவீனம் அடைந்திருப்பதாக 60% பேரும் கூறியுள்ளனர்.