சேலம் மக்களவை தொகுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி ஆகும். இத்தொகுதியில் திமுக வேட்பாளராக எஸ்.ஆர். பார்த்திபனும், அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.சரவணனும் களமிறங்கினர். 

இதில் எஸ்.ஆர். பார்த்திபன் 1,29,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கே.ஆர். சரவணனை தோற்கடித்தார். இத்தொகுதியில் 39 ஆண்டுகளுக்குப்பிறகு திமுக வெற்றி பெறுகிறது. கடைசியாக 1980ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் வெற்றிபெற்றார். அதன்பிறகு நடந்த 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றார். 

1996ல் த.மா.கா. வேட்பாளர் தேவதாசும், 1998ல் சுயேட்சையாகப் போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தியும் வெற்றி பெற்றனர். 1999ல் அதிமுக வேட்பாளர் செல்வகணபதியும், 2004ல் காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவும், 2009ல் அதிமுக வேட்பாளர் செம்மலையும் வெற்றி பெற்றனர். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 5,56,546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதி திமுகவுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. 

இந்நிலையில் இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றிபெற்றுள்ளார். 39 ஆண்டுகளுக்குப்பின் சேலத்தைக் கைப்பற்றியிருக்கிறது, திமுக. மின்துறை அமைச்சர் தங்மணியின் சொந்த ஊரான நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் கொங்கு மக்கள் தேசிய கட்சி சின்ராஜ் 2,74,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். பொதுவாக அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலம் இம்முறை அதிமுகவுக்கு கைகொடுக்கவில்லை.