மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது என ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை கழகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், வெற்றிவேல், செந்தமிழன், தங்க தமிழ் செல்வன், பழனியப்பன் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மக்களவை, சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், ''நாங்கள் வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று, தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம். தேர்தலில் தோற்று போனதால் அமமுக அழிந்துவிடாது.  திமுகவும், அதிமுகவும் கூட தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. கட்சி நிர்வாகிகள் கருத்துக்களைக் கேட்டு, அடுத்தக்கட்டமாக செயல்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினோம். வேட்பாளர்கள் வந்திருந்தார்கள்.

  

வேலூர் மக்களவை தேர்தல், நாங்குனேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசினோம். நாங்குனேரி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கவில்லை. வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாண்டுரெங்கன்தான். திட்டமிட்டு எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டின் மேல் திணித்தால் அதனை மக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி மொழியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுக்காக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு நான் சசிகலாவை சந்திக்கும் முன்பே அவர் டி.வி.யில் தேர்தல் முடிவுகளை பார்த்து தெரிந்துகொண்டார். இந்த தேர்தலில் நமக்கு வெற்றிக்கிடைக்கவில்லை என்பதால் மனம் தளராமல் எல்லோரும் ஒற்றுமையாக சரியாக செயல்பட சொல்லுமாறு கூறினார். 

மேலும் அவர் பேசுகையில் அமமுகவில் இருப்பவர்கள் ஆட்சி அதிகாரத்தையெல்லாம் தாண்டி ஜெயலலிதாவின் இயக்கம் என்றுதான் இருக்கிறார்கள். ஒரு சிலர் போகலாம். அரசியல் கட்சியில் ஒரே இடத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. யாரும் எந்தவித கட்டுப்பாடுடன் இல்லை என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.