* பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை நடிகர் ரஜினிகாந்த் உட்பட அனைவரும் வரவேற்றுள்ளனர். அதேபோல் எங்களின் தேர்தல் அறிக்கைக்கும் மக்களிடம் வரவேற்பு உள்ளது: திண்டுக்கல் சீனிவாசன். (சரிண்ணே, ஒரு தபா குழப்பம் இல்லாம தெளிவா பதில் சொல்லுங்க பார்ப்போம்...ரஜினிகாந்த் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையின் எதைப் பாராட்டினார்? நாடு முழுக்க உள்ள நதிகளை இணைப்போம்!ன்னு சொன்னதையா இல்ல நாடு முழுக்க உள்ள நரிகளை பிடிப்போமுன்னு சொன்னதையா!....பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு.)

* நான் தி.மு.க.வில் உறுப்பினராக இல்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அக்கட்சியுடன் பழகி வருகிறேன்: திருமாவளவன். (வெளங்கிடும். ஏற்கனவே உங்களை  ‘ரெண்டு சீட்டுக்காக ரெண்டு வருடங்களாக ஸ்டாலினிடம் கட்சி மானத்தை அடகு வைத்து அடங்க ஒப்புக் கொண்டு, அத்து மீறாமல்,தி.மு.க.வின் ஏளன பேச்சுகளுக்காக திருப்பி அடிக்காமல் கிடக்கும் திருமாவே’ன்னு கலாய்க்கிறாங்க அ.தி.மு.க.காரங்க. இந்த லட்சணத்துல இது வேறயா?)

* பாகிஸ்தானிலிருந்து ஒரு துப்பாக்கி தோட்டா சுடப்பட்டால், இங்கிருந்து பீரங்கி வழியாக பதிலடி தரப்படும்: அமித்ஷா. (க்கும் இதுக்கு ஒண்ணும் குறையே இல்ல அமித்ஷா ஜி. எலெக்‌ஷன் டைம்-ங்கிறதாலே பஞ்ச் டயலாக்கா ச்சும்மா அடிச்சுக் கொளுத்துறீங்க. ஆனா அவனுங்க சத்தமேயில்லாம கிலோ கணக்குல ‘பொருளை’ கொண்டாந்து போட்டுப் பொளந்துட்டு போறானுங்க. சொல் அல்ல செயல் முக்கியம்னு எப்ப புரிஞ்சுக்குவீங்க?)

* பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், மாஃபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவார்கள். மதுவிலக்கு சாத்தியமில்லாதது: கமல்ஹாசன் (கரீக்டா சொன்ன நைனா! இன்னாடா ஓவரா நல்ல புள்ளையாட்டமா பேசுறாரே நம்மாளு நம்மவரு!ன்னு மெர்சலாகி கெட்ந்தோம். ஆனா ‘சரக்குக்கு இஸ்டாப்பு சொல்ல முடியாதுடா’ன்னு சொன்ன பாரு, அங்க நிக்குற நீயி. இதே மாதிரி ’ரெண்டு மூணு கண்ணாலத்துக்கு தடை இல்லை! பப்ளிக்குல மவுத் கிஸ்ஸடிச்சா மானியம் வழங்கப்படும்’ன்னு நம்ம மேட்டரா எடுத்துவுட்டேன்னு வெய்யி, உனக்கு மவுசு எகிறும் ஆண்டவரே!)

* தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையே ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பதுதான்: ஸ்டாலின். (ஆட்சிக்கு வந்தால்தான் பழைய அதிகார மையத்தின் ஊழலை தோலுரிச்சு காட்ட முடியுமுன்னு நினைக்கிறது நீங்க வகிக்கிற எதிர்கட்சில் தலைவர் பதவிக்கு பெருமையா மிஸ்டர் ஸ்டாலின்? ஊழல் நடந்தா, இப்ப இப்ப இப்பவே கையுங்களவுமா பிடிச்சு நீதிமன்றத்துல நிப்பாட்டுங்க. அதுதான் எதிர்கட்சி தலைவருக்கான தில்லு.)