தமிழகத்தின் குழப்பமான சூழ்நிலையில் யாரை பதவி ஏற்க அழைக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி சட்டமன்றத்தை கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபிப்பவரை கவர்னர் அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கவர்னர், எடப்பாடி, ஓ.பி.எஸ் இரண்டு தரப்பையும் அழைத்துள்ளார். ஒருவர் மட்டுமே உரிமை கோரினால் அவரை கவர்னர் அழைப்பதில் பிரச்சனை இல்லை. இரண்டு தரப்பும் உரிமை கோருவதால் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி கவர்னர் நடக்க உள்ளார்.
சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 121 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக எடப்பாடி கடிதம் கொடுத்துள்ளார்.
ஓ.பி.எஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. பதவியை தொடர்கிறேன். எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே கவர்னர் யாரை அழைப்பது என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் விதமாக கவர்னர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
அதன்படி 1998 ஆம் ஆண்டு இதே போன்றதொரு பிரச்சனை உ.பி யில் லோக் தந்திரிக்கா சார்பில் ஒரே கட்சியை சார்ந்த கல்யாண் சிங் மற்றும் ஜகதாம்பிகா பால் இருவரும் ஓ.பி.எஸ், எடப்பாடி போன்று ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் போல் உ.பி கவர்னர் முடிவெடுக்க முடியாமல் திணறினார். இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு சென்றது.
உச்சநீதி மன்றம் இதற்கு ஒரு தெளிவான தீர்ப்பை அளித்தது. அதில் கவர்னர் உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அந்த வாக்கெடுப்பில் வாக்கு சீட்டுகள் அடிப்படையில் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் அதிக வாக்குகள் பெறுபவரை முதல்வராக பதவியேற்க கவர்னர் அழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அவ்வாறு அழைக்கபடுபவர் கவர்னர் கொடுக்கும் காலக்கெடுவுக்குள் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலத்தை நிருபிக்க வேண்டும்.
இதன்படி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நடந்த வாக்குப்பதிவில் கல்யாண்சிங் வெற்றி பெற்றார்.
தற்போது ஓ.பிஸ், எடப்பாடி ஆட்சியமைக்க உரிமைக் கோருவதால் யாரை பதவியேற்க அழைக்கலாம் என்பதில் 1998 ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படியே கவர்னர் நடக்கலாம் என உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் முகில் ரோத்தகி தெரிவித்தார். இதே கருத்தை மத்திய அமைச்சர் சிதம்பரமும் தெரிவித்தார்.
குழப்பமான சூழ்நிலையில் கவர்னர் 7.30 மணிக்கு எடப்படியையும் 8.30 மணிக்கு ஓ.பி.எஸ் அழைத்துள்ளார். மேற்சொன்ன பிரச்சனையில் வாக்கெடுப்பு நடத்தியது போல் ஒரு குறிப்பிட்ட நாளில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டுவதாக அறிவிப்பார். அதில் 135 எம்.எல்.ஏக்களும் தங்கள் வாக்கை பதிவு செய்வார்கள்.
தேர்தல் எப்படி நடக்கும்
சிறப்பு சட்டமன்றம் கூட்டப்படும் நாளன்று அதிமுக உறுப்பினர்களிடம் 2 வகையான வாக்குசீட்டு கொடுக்கப்படும். ஒன்றில் ஓபிஎஸ் , எடப்பாடி பெயரில் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் பெயர் முன் உறுப்பினர் டிக் செய்ய வேண்டும்.
இன்னொரு வாக்கு சீட்டில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை எழுதி தனது பெயர் தொகுதி பெயர் எழுதி கையெழுத்து இட்டு இரண்டு சீட்டுகளையும் தேர்தல் அதிகாரியின் வாக்குபெட்டியில் போட வேண்டும்.
மொத்த வாக்குகள் என்னப்பட்டு அதில் பெரும்பான்மை பெறுபவரை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பார். பின்னர் கவர்னர் கொடுக்கும் காலகெடுக்குள் முதல்வர் பதவி ஏற்றவர் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்லப்போனால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி நடக்கும் இந்த ஓட்டெடுப்பின் நோக்கம் யாரை பதவி ஏற்க அழைப்பது என்பதே.
இந்த ஓட்டெடுப்பில் திமுக கலந்து கொள்ளலாம் அல்லது புறக்கணிக்கலாம் , அது அவர்களது விருப்பம். தற்போது இருவரையும் சந்தித்தபின்னர் கவர்னர் மாளிகையிலிருந்து இதற்கான அறிவிப்பு வரலாம்.
