மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மாற்ற டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டிடிவி.தினகரன் படுதோல்வி அடைந்தார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட மாஜி எம்.எல்.ஏக்களும் படுதோல்வியையே சந்தித்தனர். 

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி அமமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் அவர்களின் தொகுதிகளில் நடந்த பிரச்சனைகள் குறித்து தினகரனிடம் புகார் தெரிவித்தனர். அப்போது, பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களின் தோல்விக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்காததே காரணம், பிரச்சாரத்தின் போதும், வாக்கு கேட்பின் போதும் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் புகார் கூறினர்.

 

எனவே, தேர்தல் தோல்விக்கு காரணமான திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அப்பொறுப்பில் இருந்து நீக்க தினகரன் முடிவு செய்துள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

ஆனால் ஏற்கனவே அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து  கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாய் கழகமான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். டிடிவி.தினகரனின் மிகவும் நெருங்கிய நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று அதிமுகவில் இணைந்தனர். ஆனால் கட்சி தாவ இருப்பவர்களை லிஸ்ட் எடுத்த டி.டி.வி.தினகரன், அவர்களை தாமாகவே நீக்க முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.