election commission seeks more power

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேவை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அரசியல் கட்சி தொடங்குவதற்கு மற்றும் கட்சியின் உயர்பதவியை வகிக்க தடை கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று தனது பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், குற்ற வழக்கில் தண்டனை பெற்றால் மட்டுமே, ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு, தற்போதைய சட்டம் இருக்கிறது. 

தேர்தலில் குற்றப் பின்னணி நபர்களை முற்றிலும் தடுக்கும் வகையில், கொடிய குற்றங்களின் குற்றப்பத்திரிக்கையில் பெயர் இருந்தாலே, சம்மந்தப்பட்ட நபரை தேர்தலில் இருந்து தகுதிநீக்கம் செய்யும் வகையில், சட்டத்திருத்தம் தேவை என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், அதேநேரத்தில் அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில், தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்னர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா என்பதையும் கவனத்தில் கொள்ளும் வகையில், விதிமுறைகள் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசியல் கட்சிகளை பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி, கட்சியின் பதிவை ரத்து செய்ய ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரம் தேவைப்படுகிறது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகத்தை பின்பற்றுவது கட்டாய தேவையாக உள்ளது என அந்த மனுவில் தெரிவித்துள்ளது.