அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களும், கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதேபோல சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். 

வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய்க்கு மட்டுமே வாங்க வேண்டும். காலை உணவிற்கு 100 ரூபாய், தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய், தொப்பி பனியன் உள்ளிட்ட 208 பொருட்களுக்கான விலையை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவித்துள்ளது. 

அதேபோல் வெஜிடபிள் பிரியாணி - 100, மதிய உணவு- 100, வெஜிடேபிள் ரைஸ் - 50, குளிர்பானம்(1 லி) - 75, இளநீர் - 40,  தண்ணீர் 1 லி - 20, சால்வை - 150, பூ - 60, பூனம் புடவை - 200, டி சர்ட் - 175, தொப்பி - 50, பிளீச்சிங் பவுடர் (1 கி) - 90, பூசணிக்காய் - 120, வாழை மரம் - 700, தொழிலாளர் செலவு - 450, வாகன ஓட்டுநர் - 695, பட்டாசு (1000 வாலா) - 600, டிரம்ஸ் (4 மணி நேரம்) - 4500, திருமண மண்டபம் - 2000 முதல் 6000, விடுதி அறைகள் (ஏசி) - 9300+ வரி (5 * விடுதி), 5800+ வரி (3 * விடுதி) என விலை பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.