Election commission enquiry

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சியின் பெயர் யாருக்கு என்ற விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணியினரிடம் தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதிகட்ட விசாரணை நடக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி, ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதை தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.

அந்த நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்ததால், கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதையடுத்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் அணிகள் சார்பில் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியாக லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர்.



இந்த நிலையில் சசிகலா அணியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ம் ஓரணியில் இணைந்தனர். இதையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் மற்றொரு அணியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி தீர்ப்பை அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் இரண்டு அணிகளிடமும் கட்சியின் சின்னம் மற்றும் கட்சி குறித்தும் அக்டோபர் 6ம் தேதி விசாரணை நடத்தினர். இதில் இரு அணிகளும் தங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரங்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எல்எல்ஏ, எம்பிக்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து விவரங்களையும் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்தனர்.

 இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

பின்னர் டிடிவி தினகரன் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர், கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதிகட்ட விசாரணையை 13ம் தேதியில் இருந்து அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட விசாரணை தேர்தல் ஆணையம் முன்பு இரண்டு அணிகளிடம் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி-ஓபிஎஸ் அணி சார்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், மைத்ரேயன் எம்பி, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும், டிடிவி தினகரன் அணி சார்பில் 10 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், டிடிவி தரப்பு வழக்கறிஞர்கள், ஆகியோர் இந்த விசாரணையில் கலந்து கொள்கின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் முன்பு பிற்பகல் 3 மணியளவில் விசாரணை நடைபெறுகிறது. 

இந்த விசாரணைக்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.