பீகாரில் கொரோனா நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் நவம்பர் 12-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த மாநிலத்தில் அக்டோபர், நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டப்படி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.


இதேபோல பாஜக இந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. அக்கட்சி விர்ச்சுவல் பேரணி, ஆன்லைன் பொதுக்கூட்டங்கள் என்று தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாரானாலும், வாக்களிக்க வேண்டிய மக்கள் தயாராவார்களா என்ற கேள்வியும் எழுந்துவருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் ஆகியோர் தபால் வாக்குகள் அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


.இது பற்றி மத்திய சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டு இந்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. இதன்படி மாற்று திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் '12டி' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வழங்கி, தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.