வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ரத்து என  தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை  பிறப்பித்து உள்ளது

கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

நாளை மறுதினம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பணம் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் நடவடிக்கையாக வேலூர் தொகுதி மக்களவை தேர்தலை ரத்து செய்து  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனும், வேட்பாளருமான கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களுக்கு விநியோகம் செய்யவே இந்த பணம் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்த அறிக்கையை தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கான அனுமதியை குடியரசுத் தலைவர் வழங்கி உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள துரைமுருகன் வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்திருப்பது ஜனநாயக படுகொலை என தெரிவித்துள்ளார். நரேந்திர மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார் துரைமுருகன்