உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஆணையை ரத்து செய்தது தொடர்பான உத்தரவில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தேர்தலில் குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டியிடுவதால் தான் அதிக வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. எனவே அது போன்று குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதி, மக்கள் தொகை அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவத்தை பழங்குடியினருக்கு தமிழக அரசு வழங்கவில்லை எனக் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பைக் கூட தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என சுட்டிக் காட்டிய நீதிபதி கிருபாகரன், தேர்தல் ஆணையம் வருகிற 17 மற்றும் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக அறிவித்தார். 

புதிய தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு, அதன்படி வருகிற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும், தேர்தல் நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் வரை பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தங்களது வேட்பு மனுவில் குற்றப் பின்னணி குறித்து முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்குவதுடன், வேட்பு மனுவில் குற்றப்பின்னணி குறித்த தகவல் அளிக்க மறுத்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் என்றும் நீதிபதி கூறினார்.

இது தவிர, குற்றப் பின்னணி குறித்த தகவலை இணைய தளத்தில் உடனடியாக வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை மீண்டும் வெளியிடும் வரை வாக்காளர் பெயர் நீக்கம், சேர்த்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.