இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பின் போது பாமக வேட்பாளரின் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மக்களவை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஈடுபட்டிருந்தார். 

இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் பாமக வேட்பாளர் ஜோதி முத்துக்கு பதிலாக சோலைமுத்து என்று உளறி கொட்டினார். இதை கேட்டதும் வேட்பாளர் கடுகடுத்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக்கொண்ட அமைச்சர் ஜோதிமுத்துக்கு வாக்களியுங்கள் என்றார். இதனையடுத்து எதிர்கட்சிகள் அனைவரும் பிரதமர் கனவில் இருந்து வருகின்றனர். அவர்களது பெயர்களை வரிசைப்படுத்தி கூறுகையில் மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏளனமான பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. 

இதற்கு முன்னதாக நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பாமக தலைவர் டாக்டர். ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரச்சார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது அமைச்சர்களை வாய்திறக்காமல் வைத்திருந்த காரணம் இப்போது தான் அனைவருக்கும் புரிகிறது.