இந்தியாவில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து எகிப்து. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, தமிழக அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக ஆட்சி காலத்தில் தான் வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வந்தது என குற்றம்சாட்டினார்.

நேற்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி எகிப்து வெங்காயத்தை, அவரே வெட்டி சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்தார். அடுத்த வாரம் தமிழகத்திலேயே 25,000 மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்கப்பட உள்ளது. 

தற்போது வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால் வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும். எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் காரம் தூக்கலாக இருக்கும். இது இதயத்திற்கு நல்லது என அதிரடியாக தெரிவித்தார்.

முதலமைச்சரே வெங்காயத்தை சாப்பிட்டு சோதனை செய்து விட்டதால் எகிப்து வெங்காயம் தொடர்பான தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என  அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.