ஈழப்போரை மீண்டும் அரசியல் ஆக்கி தமிழக அரசியலில் தி.மு.க.வை தனிமைப்படுத்த அ.தி.மு.க காய்நகர்த்தி வருகிறது. தமிழகத்தில் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ சோதனையை தொடங்கிய பிறகு தான் அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள் திடீரென விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். கட்சியின் இமேஜை சரிக்கும் முயற்சி நடைபெற்று வருவதை உணர்ந்து உடனடியாக கட்சியின் இமேஜை தூக்கி நிறுத்துவதுடன், தேர்தலுக்கான வியூகத்தையும் வகுக்க வேண்டியதன் அவசியமும் அவர்களுக்கு புரிந்து இருக்கிறது. 

இதனை தொடர்ந்த இந்த மாத மத்தியில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனையை தொடங்கினர். முதற்கட்டமாக ஜெயலலிதா பாணியில் தி.மு.கவை பலவீனப்படுத்தும் நடவடிக்கையை துவங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் முதலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கான விதையை அ.தி.மு.க விதைத்துள்ளது. அதாவது ஈழப்போரில் தாங்கள் வென்றதற்கு அப்போதைய இந்திய அரசு செய்த உதவி தான் காரணம் என்று கூறியதை கொண்டு தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க அண்மையில் நடத்தி முடித்துள்ளது. 

இதன் மூலம் தற்போது ஸ்டாலின், திருமாவளவன், திருநாவுக்கரசர், வைகோ போன்றோர் செல்லும் இடங்களில் எல்லாம் இலங்கை விவகாரம் தொடர்பாக கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 2009ம் ஆண்டு ஈழத்திற்காக பரிந்து பேசிய திருமாவளவன், வைகோ போன்றோர் எல்லாம் ராஜபக்சேவின் பேட்டிக்கு பிறகும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது எப்படி நியாயம்? என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 

ஈழத்தமிழர் விவகாரத்தை முன்வைத்து தற்போது தி.மு.கவுடன் இருக்கும் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.கவை பிரிக்க வேண்டும் என்பது தான் அ.தி.மு.கவின் நோக்கமாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஈழப்போரில் இலங்கை அரசு வெல்ல 2009ம் ஆண்டு இந்தியாவில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த உதவி தான் காரணம் என ராஜபக்சே கூறியது குறித்து திருமாவளவன் வாய் திறக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

எப்போது பார்த்தாலும் விடுதலைப்புலிகள், பிரபாகரன், ஈழம் என்று பேசும் திருமாவளவன் ஈழப்போரில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க காரணமே காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி அரசு தான் என்று ராஜபக்சே கூறியது பற்றி மட்டுமே எதுவுமே தெரிவிக்காதது ஏன் என்று ஜெயக்குமார் வினவியுள்ளார். தொடர்ந்து வைகோவையும் இதே போன்ற கேள்விகளால் தர்மசங்கடத்திற்கு ஆளாக்க அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தி.மு.கவை தமிழக அரசியல் களத்தில் தனிமைப்படுத்தும் முயற்சி துவங்கியுள்ளது.