கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130ஆக அதிகரித்துள்ளது. . தொடர்ந்து 7வது நாளாக கொரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2,023 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,82,553ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,76,039ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,67,457 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த வரிசையில் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அடக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ்,  திமுக எம்.பி. கனிமொழி உட்பட  தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நல்ல முறையில் வீடு திரும்பியுள்ளனர். 

 
அதேபோல் பிற மாநிலங்களைப் பொறுத்தவரை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை விழிப்புணர்வுடன் இருக்கும்படியும், கரோனா பரிசோதனையை செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.